சென்னையில் பிறந்து, தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வளர்ந்தேன். பள்ளிக் கல்வியை பாபநாசத்திலும், கணிப்பொறியியல் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளைத் தஞ்சைக் கல்லூரிகளிலும் முடித்தேன். மென்பொருள் துறையில் பணியாற்றும் பொருட்டு சென்னை வந்தேன். பதிமூன்று ஆண்டு கால மென்பொருள் துறை பணிக்குப் பின், வேலை துறந்தேன். சிறப்புக் கல்வி ஆசிரியருக்கான பி.எட், உளவியல் ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சைக்கான முதுநிலைப் படிப்பையும் முடித்து தனிச்சையாளராக(Freelancer) பணியாற்றி வருகிறேன்.
கல்லூரிக் காலம் முதலே கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறேன். அச்சிலேறிய முதல் நூல் ‘அப்பா- நினைவுகளின் தொகுப்பு.’ ‘எழுதாப் பயணம்’ எனும் சுயவரலாற்று நூல் ஆட்டிச உலகை அன்னையின் பார்வையில் விவரிக்கும் நூல். ‘ஆனந்தவல்லி’ எனது முதல் புதினம். தஞ்சை மராத்திய மன்னர் காலத்து அபலை ஒருத்தியின் கதை. ‘மானசா’ மகாபாரதத்தின் ஒரு கண்ணியை மீண்டும் கட்டிப் பார்த்த நாவல். ‘நெல் விளைந்த கதை’ இளையோருக்கு விவசாயம் எனும் ஆதித் தொழிலை எளிமையாக விளக்கும் சிறார் நாவல். ‘எழுத்துப் பிழை’ கற்றல் குறைபாட்டினை விவரிக்கும் நூல்.
